தொடரும் நண்பர்கள்

சனி, 5 ஆகஸ்ட், 2017

சிறுவயது ஆசைகள்


என் மகள் என்னிடம் கேட்டாள்
உங்கள் சிறுவயது "ஆசை" என்ன என்று...
ஒன்றா இரண்டா சொல்லுகிறேன் கேள் என்றேன்

வீட்டில் "வண்ண வண்ண கிளிகள்" வளர்க்க வேண்டும்
"வெள்ளை புறாக்கள்" வளர்க்க வேண்டும்
"ஆற்று மீனை" வீட்டில் வளர்க்க வேண்டும்
குஞ்சுகளுக்கு இரை  தேடிதரும் "கோழியை" ரசிக்க வேண்டும்
காலை பொழுதை கம்பீரமாக்கும் "சேவல்" வேண்டும்
"கன்று" தாயிடம் பால் குடிக்கும் அழகை ரசிக்க வேண்டும்
"தாய்" கன்றிடம் காட்டும் பாசத்தை பார்க்க வேண்டும்

என்றும் குட்டியாக இருக்கும் "ஆட்டு குட்டி" வேண்டும்
மனதால் பேசும் அழகிய "நாய் குட்டி" வேண்டும்
வெள்ளை "முயல் குட்டி" வேண்டும்
வானத்தில் பறக்கும் "வல்லூறு"  என் வீட்டு பெட்டியில் வேண்டும்

அன்பாய் பழகும் "புலி குட்டி" வேண்டும்
கம்பீர "ஆண் சிங்கம்" என்னிடம் பாசமாக இருக்க வேண்டும்
"யானைக்குட்டியோடு" தண்ணீரில் ஆட்டம் போட வேண்டும்
அழகிய "மான் குட்டிகள்" தோட்டத்தில் துள்ள வேண்டும்
பாசக்கார "பாம்பும்" வேண்டும்
காலையில் கண் முழிக்கும் சமயம்
அனைத்தின் சத்தமும் என் அருகில் வேண்டும்

மேலும் கேள் மகளே என் சிறுவயது ஆசைகளை
ஆற்றின் இக்கரைக்கும் அக்கரைக்கும் நீஞ்ச வேண்டும்
நீஞ்சிய களிப்பும், களைப்பும் வேண்டும்
நண்பர்களோடு ஆற்று மணலில் விளையாட வேண்டும்
சித்திரை பவுர்ணமியில் நிலா சோறு ஊர்கூடி உண்ண  வேண்டும்
பெயர் தெரியாதவர் அழைக்கும் மாமன், மச்சான் உறவு வேண்டும்
சாமிக்கு சப்பரம் செய்து இழுத்து வரவேண்டும்

சாமிக்கு வெட்டும் கிடாவை கட்டி அழ வேண்டும்
ஆனாலும் மற்றவருக்கு மதிய குழம்பு ருசிக்க வேண்டும்
வண்டி இழுக்கும் மாட்டின் ஜல் ஜல் சலங்கை சத்தம் வேண்டும்
பல் துலக்க ஆலும் வேம்பும் வேண்டும்
நீர்வீழ்ச்சியாய் பாயும் பம்ப்பு செட்டில்
கண் எரிய எரிய குளிக்க வேண்டும்
அம்மாச்சி சுட்டு தரும் ஆப்பமும் , தேங்காய் பாலும்
தொண்டையில் சுகமாய் இறங்க வேண்டும்

இயற்கை காற்றை சுவாசிக்க வேண்டும்
பாசமான மனிதர்கள் வேண்டும்
வெள்ளந்தி உள்ளங்கள் வேண்டும்
கோபமாய் இருப்பதுதான் கம்பீரம் என்று வாழும்
வெள்ளை வேட்டி எதார்த்த மனிதர்கள் வேண்டும்
“கொத்து”  மீசை கூட்டும் “கெத்து” பஞ்சாயத்துகள் வேண்டும்
வாகனம் இல்லா  சாலைகள் வேண்டும்
கிடா மீசை பூசாரியும், அவர் பூசும் திருநீறும் வேண்டும்
அம்மனுக்கு படைத்த பொங்கல் தொன்னையில் வேண்டும்

மகள் சொன்னாள் இவ்வளவு தானா உங்கள் ஆசை..?
இதோ பிடியுங்கள் என்னுடைய TAB-ஐ
இதில் அனைத்தும் உள்ளது
தீர்த்து கொள்ளுங்கள் உங்கள்

சிறுவயது ஆசைகளை என்றாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...