தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 21 மே, 2017

தஞ்சை  - கரந்தையை பிறப்பிடமாக  கொண்டு பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து, வேலை நிமித்தமாக கோவை நகரை 1993 ஆம் வருடம் வந்தடைந்தேன் . சிலவருட பணிக்கு பிறகு இலங்கை நாட்டின் கொழும்பு மாநகரில் வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைத்து  1998 நவம்பர் மாதம் கொழும்பு மாநகரை சென்றடைந்தேன்.

1998 இல் இருந்து 2005 வரை கொழும்பு நகரில் பணி  ஆற்றிவிட்டு , மீண்டும் இந்தியா திரும்பி 2006-இல் இருந்து தொழில் ஆரம்பித்து நடத்திவருகிறேன்..

இன்றைக்கு சுமார் 30 பணியாட்கள் வேலைபார்க்கும் ஒரு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை எனது நெருங்கிய நண்பரும், எனக்கு இயந்திரங்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தியவரும், எனது  வழிகாட்டியும் ஆகிய திரு. ராஜபாண்டி அவர்களை பங்குதாரக கொண்டு இந்த நிறுவனத்தை  நடத்திவருகிறேன்.  1993 முதல் இன்று வரை கோவை நகரில் வாழும் ஒரு வாய்ப்பை பெற்று வாழ்ந்துவருகிறேன்.

சிறுவயதுமுதல் எழுத்துப்பணியில் ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், பல்வேறு காலகட்டங்களில் சிறு சிறு முயற்சிகள் செய்து அவை சிறிய அளவில் வெற்றிகள் பெற்றாலும் முழுமையாக அந்த பணியை தொடரமுடியாத ஒரு சூழ்நிலை நிலவியது. இப்பொழுது  மீண்டும் எழுத்துப்பணியின் மேல் இருந்த ஆர்வம் துளிர்விட்டு வளர்ந்துவருகிறது.

இதற்கு முழு அளவில் துணை நிற்கும் எனது மனைவி திருமதி. கல்பனா அவர்களும், எனது மாமனார் திரு. பிச்சை பிள்ளை அவர்களும், நண்பர்கள் கரந்தை திரு செந்தில், திரு.சரவணகுமார், அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர் திரு சம்பத், மும்பை வாழ் நண்பர் திரு சரவணன், கரந்தை திரு விசு  ஆகியோரது உற்சாகமான வார்த்தைகளாலும், தூண்டுதலாலும் எழுத ஆரம்பித்துள்ளேன்.

விரைவில் எனது படைப்புகள் புத்தகவடிவில் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது...

கடந்த சனிக்கிழமை ( 20-05-2017) அன்று மாலை வேளையில் எங்களது பள்ளியின் ஆசிரியரும், பிரபல வலைப்பூ ஆசிரியரும் ஆன  (http://karanthaijayakumar.blogspot.com/)  எழுத்தாளர் திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களை  அவரது இல்லத்தில் சந்தித்து மிக  நீண்ட ஒரு கருத்து பரிமாற்றத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தது. அவரது புத்தகங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகம் ஆகி இருந்தாலும், நேரில் அந்த புத்தகக்கங்களை எழுதுவதற்கான தகவல்களை திரட்டுவதற்காக,  முயற்சிகளை அவர் எடுத்த விதத்தை கேட்டு அறியும் ஒரு வாய்ப்பை பெற்றேன். எனது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நாள் தான்.

எனது சிறுகதை ஒன்றை அப்பொழுதே படித்துவிட்டு உங்கள் நடை நன்றாக இருக்கிறது என்று தனது கருத்தை தெரிவித்தார்.  மேலும் எனது ஒரு நாவலை அவரிடத்தில் கொடுத்துவிட்டு படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என்றும் தெறிவித்துவிட்டு வந்திருந்தேன். அன்றைய இரவே படித்து விட்டு அவரது பாராட்டுகளையும் கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார். மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம்.


அவரது அறிவுறுத்தலின் படி முதலில் வலைப்பூ ஒன்றை எழுதலாம் என்று  முயல்கிறேன். உங்களது கருத்துக்களும் , விமர்சனங்களும் என்னை மேலும் சிறப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...