தொடரும் நண்பர்கள்

திங்கள், 13 நவம்பர், 2017

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ளியியல்  நிருவனத்திலும் , அதற்கு பிறகு புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும்  (Harvard University) பயின்றவர். 

(சுப்பிரமணியன் சுவாமி அன்றும் இன்றும் )

இந்தியா மெச்ச வேண்டிய ஒரு புத்திசாலி இவர். இந்திய அரசியலில் அவர் நுழையாமல் தனது அறிவை இந்தியாவின் முன்னேற்றத்திருக்கு பயன் படுத்திருப்பாரே ஆனால், இன்று இந்தியா  இந்த மேதையை கொண்டாடி இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்க வில்லை என்பதை விட , அவர் அதை வழங்கவில்லை என்று சொல்லுவதே  சரி என்று நினைக்கிறேன்..


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோடு 

அவரை ஒரு சிறந்த அறிவாளி என்று சொல்லுவதற்கு இரண்டு விசயங்களை நாம் பார்த்தாலே போதும்...

ஒன்று

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் சேர்ந்து ஒரு சில நாட்களில் உலக புகழ் பெற்ற கணித மேதையும் பேராசிரியருமான திரு பால் சாமுவேல்சன் அவர்களது வகுப்பு. கரும்பலகையில் அவர் எழுதி இருந்த ஒரு கணித சூத்திரத்தில் தவறு இருப்பதை சுப்பிரமணியன் சுவாமி எழுந்து சுட்டி காட்டினார். 


வகுப்பு எடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி


அந்த தவறை ஒத்து கொண்ட பேராசிரியர் சாமுவேல்சன் உடனடியாக அதை திருத்தி கொண்டார். அன்றில் இருந்து சாமுவேல்சனுக்கு சுப்பிரமணியன் சுவாமி செல்ல பிள்ளை ஆகிவிட்டார்.

இரண்டு

பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டம் பெறுவதற்க்கான ஆய்வை ஹார்வர்டு பல்கலை கழகத்தில் செய்துகொண்டிருந்தார். ஒரு ஆய்வாளனுக்கு வழங்கப்படும் கால அளவு குறைந்தபட்சம் நான்கரை ஆண்டுகள், நமது சுவாமி தனது ஆராய்ச்சி முடிவுகளை சுமார் பதினெட்டு மாதங்களில் பல்கலை கழகத்தில் சமர்ப்பித்து அதற்கான சிறப்பு அனுமதியையும் பெற்று இரண்டு வருடங்களில் வெற்றிகரமான ஒரு முனைவராக வெளிவந்தார். 

முன்னாள் பிரதமர் மொராஜ் தேசாய் மற்றும் சுப்பிரமணியன் சாமி 


இந்த இரண்டு நிகழ்வுகள் அவரது அறிவு கூர்மைக்கு சொல்ல பட்ட சாதாரண நிகழ்வுகள் தான். இதை போல் எத்தனையோ நிகழ்வுகள்.

இப்படி பட்ட அறிவாளி, புத்திமான், ஏன் இப்படி...

எத்தனையோ ஊழல் வழக்குகளை தாக்கல் செய்தவர், நிறைய அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். இவரை நினைத்தாலே சிலருக்கு தூக்கம் தொலைந்துவிடும். குமரிமுனையில் ஒரு கடையில் தயாநிதிமாறன் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என்பதில் ஆரம்பித்து காஷ்மீர் தீவரவாதிகளுக்கு முஷாரப் உப்புமா சமைத்து கொடுத்ததுவரை தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்லுவார். யாரும் எதிர்பார்க்காமல் ஒரு சில ஆதாரங்களை அணுகுண்டாய் வீசுவார்.


நரசிம்மராவுடன் 


அவரது கிரகம் அவரை இப்படி ஆட்டிவைப்பதாகவே நினைக்கலாம்..சரி விசயத்திற்கு வருவோம் 

கைலாஷ் மனோசரோவர் யாத்திரை

கைலாஷ் மனோசரோவர் யாத்திரை என்பது இந்துகளின்  புனித யாத்திரையாக சொல்லப்படுகிறது. இதை   வருடா  வருடம் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து செல்லும் இந்துக்கள்  மேற்கொள்கிறார்கள்.  இந்த  மனோசரோவர் ஏரி திபெத்தில் உள்ளது. திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று சீனா சொல்கிறது. இந்த யாத்திரை போவதற்கு சீனா தடைவிதித்தது. 

ஒபாமாவுடன்..


இந்த தடையை சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் தனது முயற்சியால் சீன அதிபர் திரு ஷி ஜிங்பிங்கை சந்தித்து நீக்கினார். இது எப்படி சாத்தியம் ஆனது..?. சீனாவிற்கு சுப்பிரமணியன் சுவாமி யார்...? இந்திய அரசியல் வாதி தானே, அவர் சொல்லி எப்படி இது சாத்தியம் ஆகியது... விடை வேண்டும் என்றால் நாம் 1970களை நோக்கி பயணிக்க வேண்டும்
சுப்பிரமணியன் சுவாமி அப்பொழுது ஹார்வர்டு பல்கலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். சீன மொழியை கற்கவேண்டும் என்று முயற்சி எடுத்து கற்றுகொண்டார். அதன் தொடர்ச்சியாக ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதினார். –“1952-70 இந்திய சீன - பொருளாதார வளர்ச்சி” – என்பது தான் தலைப்பு. அன்றைக்கு சீன பொருளாதார அறிஞர்களால் நிராகரிக்க பட்ட ஒரு படைப்பு. அன்று நிராகரிக்க பட்டதற்கு காரணம் சீனாவின் வளர்ச்சி உண்மை இல்லை, அவர்களது புள்ளி விவரங்கள் அனைத்தும் மிகைபடுத்த பட்ட ஒன்று, உதாரணத்திற்கு விலை குறைந்த சோளம் பயிரிடப்பட்டு விளைந்த பின்னர் அதன் விளைச்சல் பணபயிர்களில் சேர்க்கபட்டு விவசாய வளர்ச்சி அதிகரித்து காட்டப்படும் இப்படி எத்தனையோ விசயங்களில் சீனாவின் வளர்ச்சி அதிகரித்து காட்டப்பட்டுள்ளதாக தனது ஆராய்ச்சியில் தெளிவாக சொல்லி இருந்தார். 


“Economic Growth in China and India, 1952-70 “– சுப்பிரமணியம் சுவாமி
University of Chicago Press (28 December 1973)
 
அமேசானில் ருபாய்   7,889.76க்கு கிடைக்கிறது.
 
 சீனா இதை கடுமையாக எதிர்த்தது.
 
பிறகு எப்படி சுப்பிரமணியன் சுவாமியின் வேண்டுகோளை சீனா கைலாஷ் மனோசரோவர் விசயத்தில் ஏற்றுகொண்டது...?வாருங்கள் பார்ப்போம்.
சீனா உலக வங்கியில்  குறைந்த  வட்டிக்கு கடன் கேட்டது, உலக வங்கி அவர்களது பொருளாதார அறிக்கையை காரணம் காட்டி, உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க இயலாது, நீங்கள் வளர்ந்த நாடு என்று பதில் அளித்தது.

சீனா தவித்து போனது, அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு, அதற்கு சாட்சியாக திரு சுப்பிரமணியம் சுவாமியின் ஆய்வறிக்கையை வழங்கியது, கடனும் கிடைத்தது.

அன்றில் இருந்து திரு சுப்பிரமணியன் சுவாமி சீனாவின் கவுரவ விருந்தினர்தான். அவரை சீனா வெளியுறவுத்துறை கைலாஷ் கைலாஷ் மனோசரோவர் யாத்திரையை மேற்கொள்ள சொன்னது...
அவரும் சென்று வந்தார்...அந்த புகைப்படங்கள் கீழே...

இவரை பற்றி படிக்கும் பொது எல்லாம் எனது மனதில் எழும் ஒரே கேள்வி  - நீங்க நல்லவரா ? கெட்டவரா? என்பதுதான்...


ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஈழத்தில் விளைந்த வீர தளபதிகள் - நான் லீமா கதைக்கிறேன்..ஓவர்..

சத்திய சோதனை - மாத்தையாவின் கைது...31ஆம் தேதி , மார்ச் மாதம்  1993வருடம்  கொக்குவில் என்கிற இடத்தில் அமைந்திருந்த மாத்தையாவின் இருப்பிடத்திர்க்கு சென்ற பால்ராஜ் அவரிடம் செய்தியை தெரிவித்தார். மாத்தையாவை சுற்றி அவரது பாதுகாவலர்கள்.

அவர் தெரிவித்தது இதுதான் ”அண்ணை உங்களை தலைவர் அழைத்துவர சொன்னார்”

முதலில் நீ போ நான் வருகிறேன் என்று சொன்ன மாத்தையா மீண்டும் பால்ராஜ் கையோடு அழைத்துவர சொன்னார் என்று சொன்னவுடன் மனதை மாற்றிக்கொண்டு, பாதுகாப்பாளர்கள் அனைவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்கிற ஒரு தகவலையும் பால்ராஜ் இடம் தெரிவித்துவிட்டு தலைவரை பார்க்க சென்றார்.


இந்த ஒரு நிகழ்வு பால்ராஜின் விசுவாசத்தை சோதிப்பதாக அமைத்திருந்தது. ஆனால் பால்ராஜ் அவர்கள் இதை தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதி தனது விசுவாசத்தை நிருபித்தார்.


இதில் “ரா” என்று சொல்ல கூடிய இந்திய உளவு அமைப்பின் கைப்பாவையாக செயல்பட்டு தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டு அடுத்த தலைவராக திட்டம் தீட்டினார் என்பது குற்றச்சாட்டு. குற்றம் நிருபிக்கபட்டு அவருக்கான தண்டனை டிசம்பர் 28,1994 அன்று நிறைவேற்றப்பட்டது. அவரோடு அவரது கூட்டாளிகள் சிலருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


ஆனையிறவு தாக்குதல் : வரலாற்று பெருமை

பெற்ற தாக்குதல் 


1991 இல் ஆனையிறவுத் தளத்தை அழித்தொழிக்க முற்பட்டு சுமார் அறுநூறு போராளிகள் வீரச்சாவடைந்தும்  புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இதற்கு விடை வேண்டாமா...?

பால்ராஜை அழைத்த பிரபாகரன் ஆனையிறவு முகாம் மீண்டும் நமது வசமாக வேண்டும். திட்டம் இதுதான். செய்யபோவது நீ. என்று திட்டத்தை விளக்கி சொல்லிவிட்டு உளவு வேலைகளை ஆரம்பித்து சரியான தாக்குதல் திட்டத்தோடு வா என்று அனுப்பிவைத்தார்.

 

தலைவரோடு திட்ட விளக்கத்தில்

மிகவும் ஒரு கடினமான பணி. பூகோள ரீதியாக சண்டைக்கு ஏற்ற இடம் அல்ல இந்த முகாம் அமைந்திருந்த பகுதி. எப்படி சினிமா எடுப்பதர்க்கு ஒரு வரி கதை கிடைத்தால் , நமது திரைகதை வித்வான்கள் அதை செழுமை படுத்தி எழுதி அந்த படத்தை எப்படி  ஒரு  புதிய மெர்சிடஸ் கார் போல ஒரு செலிபிரிட்டி அந்தஸ்தோடு வெளியிடுவார்களோ அப்படி திட்டம் பால்ராஜ் அவர்களால் தயாரிக்க பட்டு தலைவரிடம் கொடுக்க பட்டது. தலைவரின் பல மாறுதலுக்கு பிறகு திட்டம் முழுமைபெற்றது. து இரண்டாம் உலக போரில் பின் பற்றப்பட்ட பலதிட்டங்களை முழுமையாக படித்த பால்ராஜ் அவர்களால் முழுமை செய்யப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.


சதுப்புநிலப் பகுதிகள் வழியாக 10 கிலோமீட்டர்  தூரம் நடை பயணம் 

 திட்டம் இதுதான் : 5 கிலோமீட்டர் கடல்வழி படையினரை சிங்கள இராணுவத்தின் கண்ணில் சிக்காமல் படகின் மூலம் குடாரப்பில் தரையிறக்கி அங்கே இரு புறமுள்ள படைமுகாம்களுக்கு இடையே சதுப்புநிலப் பகுதிகள் வழியாக 10 கிலோமீட்டர்  தூரம் நடந்து இத்தாவில் என்னும் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டர் நீளமும் ஒரு கிலோமீட்டர் அகலமும் கொண்ட அந்தப் பெட்டியின் நடுவில் அகழிவெட்டி கட்டளை பீடத்தை நிறுவி அங்கிருந்து பால்ராஜ் சண்டையை நடத்துவது. இராணுவமுகாமுக்கு சப்ளை லயனை வெட்டி எரிந்து விட்டு தாக்குதல் தொடுப்பது. இதுதான் திட்டம். திட்டத்தை முழுதும் ஆராய்ந்து ஒரு சிறந்த போருக்கான பயிற்சியில் ஈடுபட்டார்கள்.


கடல் வழி தரை இறக்கதிர்ற்கு தயாராக 

இத்தாவில் பெட்டியோடு தலைமையகம் தொடர்பை ஏற்படுத்திகொடுக்கும் வரை வீரர்கள் வசம் இருக்கும் உணவு, மருந்து ஆயுதம் மட்டுமே வைத்துகொண்டு தாக்குபிடிக்கவேண்டும். கொடுக்க பட்டுள்ள வீரர்கள் சுமார் 1200 பேர் மட்டுமே. மேலும் அவர்களை தரை இறக்கிவிட்டு படகுகள் திரும்பிவிடும். உள்ளே சென்றால் வெற்றி பெற்று தரைவழியாக வெளிவரலாம் , இல்லை வீர மரணம் அடையலாம். இதை தவிர வேறு வழி இல்லை. இவர்களை சுற்றி இலங்கையின் மொத்த ராணுவமும் குவிக்கப்படும் என்பது எதார்த்தமான உண்மை.

 இந்த நடவடிக்கை வெற்றி பெற்றாக வேண்டிய ஒன்று , தோல்வியடைந்தால் மிக மோசமான விளைவுகளை இயக்கம் சந்திக்க வேண்டியிருக்கும். இது பால்ராஜ் நன்கு அறிந்த உண்மை. இந்த அணியை கடல்வழி தரை இறக்கம் செய்ய கடல் புலிகளின் தளபதி சூசை ஏற்பாடுகளை செய்தார். இந்த அணிக்கான ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களும் பாதுகாப்பாக தரை இறக்கம் செய்யபடவேண்டும். கடல் புலிகளின் தளபதி சூசைக்கும் இது ஒரு மிக பெரிய சோதனையான முயற்சிதான். நடுகடலில் இலங்கை இராணுவத்தின் படகுகள் சூழ்ந்துகொண்டால் திட்டம் முழுமையும் பாதிப்படையும். இப்பணி  எல்லா வகையிலும் மிகவும் ஆபத்தான ஒரு திட்டம். ஆனால் வெற்றி பெற்றால் இது ஒரு வரலாற்று வெற்றி தான்.


இதில் பால்ராஜ் தவிர அவரது தளபதிகளாக தீபன், துர்க்கா, விதுஷா போன்றோரும் நியமிக்க பட்டிருந்தார்கள். தளபதி பால்ராஜ் பெட்டி அமைத்து தாக்குதல் தொடுக்கவேண்டும். தீபன் தனது படைகளோடு சென்று பால்ராஜ் அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி பின்னர் முகாமை தாக்க வேண்டும்.


(கிடைத்த தண்ணீரை பருகவேண்டியதுதான்)

இந்த சண்டையை இன்றைய இளைஞர்கள்  கணிணி விளையாட்டுகளில் மட்டுமே பார்க்க முடியும், விளையாட முடியும். மிகவும் அற்புதமான ஒரு தாக்குதல் திட்டம்.

 இந்த சண்டை ஆரம்பித்த நாள் முதல் சோதனைகள் பல நடந்தது. கடல் வழி  தரையிறக்கம் நடந்தபோது ரேடாரில் தகவல் அறிந்த சிங்கள ராணுவம் மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது. அதை சமாளித்து சுமார் 1200 வீரர்கள் வரை தரை இறக்க கடல் புலிகளில் தளபதி சூசை உதவினார்.

 பால்ராஜ் தலைமையில் தரை இறங்கிய படையிடனர் தங்கள் ஆயுதங்களோடும் இன்ன பிற உடமைகளோடும் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சதுப்பு நில சேற்றுக்குள் நடந்து தங்கள் இடத்தை அடைந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நீள  அகலம் உள்ள பெட்டி போன்ற ஒரு காவலரணை அமைத்தார்கள். அதன் நடுவே பால்ராஜ் தனது கட்டளை பீடத்தை அமைத்துகொண்டார். யோசித்து பாருங்கள் அவரை சுற்றி சுமார் 40,000 சிங்கள ராணுவ வீரர்கள். என்ன நடக்கிறது என்று சரியாக புரியாமல் சிங்கள தளபதிகள் யோசித்துகொண்டிருந்த வேளையில் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து பால்ராஜ் நிலை எடுத்துவிட்டார்.சிங்கள ராணுவம் தனது ஆயுதங்களும் , எறிகணைகளும் தீரும் வரை தாக்குதல் நடத்தியது. பால்ராஜ் பம்பரமாய் சுழன்டார். கட்டளைகள் நெருப்பாய் பாய்ந்தன. சிங்களபடைகளுக்கு எத்தனை புலிகள் அங்கு உள்ளார்கள் என்று யோசிக்கவே முடியவில்லை. போர் என்றாள் உக்கிரமான போர் , சிங்கள இராணுவம் தனது உச்சபட்ச தாக்குதலை அரங்கேற்றியது. அணைத்து விதமான ராணுவதலவடங்களும் இந்த பெட்டியை சுற்றி சிங்கள இராணுவத்தால் குவிக்கப்பட்டது...இதற்கு நடுவே தளபதி தீபன் தனது அணியுடன் முன்னேறி பால்ராஜ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றார். அந்த பணி மிக கடினமாக இருந்தது. புலிகளில் தலைவர் மிக கடினமாக தீபனிடம் பேசினார். என்னை நம்பி அங்கு போராளிகள் இவ்வளவு பெரிய படைக்குள் நின்று, தக்கவைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இங்க உடைச்சுக் கொண்டு போகமுடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள் 

தீபன் மிக கடுமையான போரட்டத்துக்கு பிறகு பால்ராஜ் அவர்களோடு தொடர்பை ஏற்படுத்தினார்.

 


(அற்புத தருணம், தீபன், புலித்தேவன் மற்றும் இலங்கள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா )

இதற்கு இடையில் சிங்கள படைகளின் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல் பால்ராஜ் அணி தாக்குதலுக்கு கொண்டு சென்றிருந்த ஆயுத குவியலை தாக்கி அழித்தது. மனம் தளராத பால்ராஜ் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து சுமார் 34 நாட்கள் படை நடத்தி யானையிறவு முகாமை மீட்டு விட்டு A-9வீதியின் வழியாக சிங்கள ராணுவத்தை துரத்தி அடித்த பால்ராஜ் அவரது தலைவரை பரந்தன் என்னும் இடத்தில சாலைவழியாக வெற்றி பெற்று சென்று சந்தித்தார்.

ஒருவீரன் களத்தின் உள்ளே இறங்கும் போது இருக்கும் மனநிலை சற்றும் குறையாமல் , அவனது விவேகம் மேலும் மேலும் கூடினால் மட்டுமே இத்தகைய தாக்குதல் வெற்றி பெற முடியும்... யோசித்துபாருங்கள்...இது ஒன்றும் கிரிகட் ஆட்டம் அல்ல ஆறும், நான்கும் அடித்து கோப்பையை வெல்ல. உள்ளே நுழையும் ஒவ்வொரு போரளிக்கும் தெரியும் வெற்றிபெற்றால் மட்டுமே உயிரோடு திரும்ப முடியும், களம் மிகுந்த கடினமானது... நான்குபக்கமும் எதிரியால் சூழப்பட்ட இடத்தில இருந்து போர் புரிகிறோம்...இந்த மண அழுத்தங்களை போக்க அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை, உற்சாகம் பால்ராஜ் மட்டுமே. அவரது நம்பிக்கை தரும் பேச்சு , தந்திரமான திட்டங்கள், வீரமான நடவடிக்கைகள் இவை மற்றுமே இந்த வெற்றியை சாதிக்கவைத்தது.. ( இலங்கை ராணுவம் எதிர்கொள்ள பயந்த - தியாக சிகரங்கள் - கரும்புலிகள் )

இந்த கால கட்டத்தில் இலங்கை ராணுவ அமைச்சர் ரத்வத்தை என்பவர் போரை முன்னின்று நடந்தி கொண்டிருந்தார். ராணுவ தளபதி ஹெட்டியாராச்சி என்பவர். இந்த போரை வழிநடத்திய தளபதி, இவர்  அமெரிக்காவில் ராணுவபடிப்பை படித்தவர், சிறந்த அறிவாளி . அவர் ஒரு மாற்று திட்டத்தை ராணுவ அமைச்சரிடம் முதலில் தெரிவித்தார். நாம் முதலில் ஆனையிறவு முகாமை விட்டு வெளியேறுவோம், புலிகள் உள்ளே புகுந்தவுடன் முழுபலத்துடன் சுற்றிவளைத்து தாக்குவோம் என்பதுதான் அது. ஆனால் ராணுவ அமைச்சர் அதை மறுத்துவிட்டார். பின்வாங்கினால் நமக்கு மிகபெரிய இழுக்கு. போரிடுவோம். என்றார் . போரியல் மரபுப்படி  தளபதி ஹெட்டியாராச்சி வகுத்த திட்டம் நடந்திருந்தால் புலிகள் மிகபெரும் ஒரு இழப்பை சந்திக்கவேண்டியிருக்கும். இலங்கை ராணுவ அமைச்சர் ரத்வத்தை புலிகள் வெற்றிபெற ஒரு தவறான முடிவை எடுத்தார்.

  
இது புலிகளின் வீர வரலாற்றில் மட்டும்  அல்ல உலக போரியல் வரலாற்றில் ஒரு மிக பெரும் ஒரு வெற்றியாகத்தான் பார்க்கபடுகிறது. இதை முன்னின்று நடத்திய பால்ராஜ் அவர்கள் மிகபெரும் ஒரு வீரர் என்பதை விட சிறந்த ஒரு தளபதி, போரியல் நிபுணர் என்பதே சரி.

எதிரிகள் பாராட்டி வியந்த வீரன் 

2003ஆம் வருடம் நடந்த ஒருநிகழ்வு பால்ராஜின் பெருமையை நிலை நாட்டுவதாக இருந்தது.2003 ஆம்  வருடம் பால்ராஜ் கடுமையான மறைடப்பல் பாதிகப்பட்டு இருந்தார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு  நோயும் இருந்தது. நோர்வே அரசின் அனுசரணையோடு நடந்த அமைதி ஒப்பந்ததம் அமுலில் இருந்த நாட்கள் அவை. நோர்வே நாட்டு பார்வையாளரின் அனுசரணையோடு பால்ராஜ் சிங்கபூர் பயணம் ஆனார்;. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து தாயகம் திரும்பினார்.


அவர் சென்றது இலங்கை நகரின் மத்தியில் அமைத்துள்ள சர்வதேச விமானநிலையத்தின் ஊடக தான். சிங்கப்பூரில் இருந்து திரூம்பி அதே விமான நிலையத்தை அடைந்த பால்ராஜை சுமார் 15 இல் இருந்து 20 ராணுவ அதிகாரிகள் சுற்றிவளைத்தார்கள்.


 (அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில்) 

நோர்வே குழு என்ன செய்யபோகிரேம் என்று தெரியாமல் கையை பிசைந்தது. பால்ராஜ்க்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அது மிகபெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று புரிந்து மிகவும் பதட்டபட்டார்கள்.

சுற்றி இருந்த ராணுவ அதிகார்கள் அனைவரும் போரில் பங்குபெற்று கள முனையில் போர் புரிந்தவர்கள். மெல்ல பால்ராஜை சுற்றி நின்று அவர்களுகுக்குள் பேசிகொண்டார்கள். இவர்தான் அந்த வீரன் பால்ராஜ் என்று. சிலர் அவர்களுக்குள் பேசி கொண்டார்கள். சிலர் தயங்கியபடி பால்ராஜிடம் கை குளுக்கினார்கள்.
கூடி இருந்த ராணுவ அதிகாரிகள், எங்களுக்கு பால்ராஜின் வீரத்தை தெரியும் அனால் அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிடைத்தது . நல்ல ஒருவீரனை நேரில் பார்க்க வேண்டும் என்ற எங்கள் ஆவல் பூர்த்தியாகிவிட்டது என்றபடி கலைத்து சென்றார்கள்.

நோர்வே குழுவினருக்கு அப்பொழுதுதான் உயிர் வந்தது போல் இருந்தது.  இப்படி எதிரிகளும் பாராட்டப்படும் ஒரு வீரராகதான் பால்ராஜ் வாழ்ந்தார்.


சுனாமி

அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நேரத்தில் கருணா அம்மானின் பிளவுக்கு பிறகு கிழக்கு பிரதேசத்தில் நிலவிய ஒரு அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க கூடிய ஒருவர் அங்கு அனுப்ப படவேண்டும் என்கிற நேரத்தில் மீண்டும் தலைவரின் எண்ணத்தில் இருந்த ஒரே வீரன் பால்ராஜ் தான்.
 

தாக்குதல் திட்டத்தை விளக்கும் பால்ராஜ் - எந்த நேரமும் பேனாவும் கையுமாக இருக்கும் ஒரே தளபதி..

இங்கு தமிழ் எதிர்பாலர்களையும் சமாளிக்க வேண்டும், சகோதர யுத்தத்தில் கொள்ள பட்ட தமிழ் குடும்பங்களை ஆறுதல் படுத்த வேண்டும், படை நடத்தவேண்டும், படையை பலபடுத்த வேண்டும், உளவு அமைப்பை பலபடுத்த வேண்டும் , இன்னும் எவ்வளவோ பணிகள்.

பால்ராஜ் தனது இனிய பழகும் திறனாலும் அன்பான பேச்சாலும் அணைத்து வேலைகளையும் செய்துவரும் போது சுனாமி என்கிற ஆழிபேரலை டிசம்பர் 26, 2004 அன்று ஏற்ப்பட்டது. சுனாமி அன்று கடைகரையில் இருந்த பால்ராஜ் கடல் அலைகளை அவதானித்து உடனடியாக வீரர்களை வானத்தை நோக்கி சுட உத்தரவிட்டபடி ஊருக்குள ஓட சொன்னார்.

சுனாமியில் போராடி மீண்டு கரைவந்த பால்ராஜ் இயற்கையின் மரண பிடியில் இருந்து மீள முடியாமல் தனது 42வது  வயதில்  20 மே  2008  மதியம்  2:00 மணிக்கு ஏற்பட்ட மாரடைப்பில்  இயற்கை எய்தினார். 


லீமா


லீமாவின் குரல் கேட்டால் போராளிகளுக்கு எங்கிருந்தோ ஒரு உற்சாகம் பிறந்துவிடும். யாராலும் எதனாலும் அசைக்க முடியாத அசாத்தியமான துணிச்சல் பிறக்கும். எந்த நெருக்கடியான, அபாயம் நிறைந்த சூழ்நிலையிலும் லீமாவின் குரலைக் கேட்டால் போதும், அவர்கள் அந்த நெருக்கடியையோ அபாயத்தையோ மறந்து விடுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகிறார் ஒரு பெண் போராளி பிரிகேடியர் பால்ராஜைப்பற்றி. இங்கே லீமா என்று அவர் குறிப்பிடுவது பிரிகேடியர் பால்ராஜையே. லீமா என்பது அவருடைய சங்கேதப் பெயர். போராளிகளிடத்தில் இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். பால்ராஜ் என்ற பெயர் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய உளவியலில் இந்தச் சித்திரம் அப்படித்தான் பதிந்திருந்தது. அந்த அளவுக்கு அவர் புலிகளின் உளவுரணை வடிவமைத்திருந்தார். அல்லது புலிகளின் உளவுரணை வடிவமைக்கும் படியான ஒரு குறியீடாக காணப்பட்டார். இதற்காக அவர் தன்னை கடுமையான போர்க்கள வாழ்வில் ஈடுபடுத்தி இந்தப் புள்ளியைத் தொட்டிருந்தார். 

எல்லோராலும் செல்லமாக லீமா என்று அழைக்கப்படும் பால்ராஜ் துணிவு, தந்திரம் வேகம் ,இம் மூன்றின் உருவம்தான் பாராஜ் அவர்கள். எதிரி களம் திறப்பதற்கு முன்னர் ,எதிரிக்கும் களம் திறப்பதில் வல்லவர், புதிய புதிய திட்டங்கள் போர் நுட்பங்களுடன் போராளிகளை வழிநடத்துவதில் வல்லவர் லீமா. 


நான்  லீமா கதைக்கிறேன்..


இப்படிபட்ட லீமதான் அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதியாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.களமுனையில் எதிரியுடன் நேரடியாக சண்டையிட்டு உடலெங்கும் பல விழுப்புண்களை வாங்கிகொண்டு களமுனைகளில் வீறுநடை போடுவார் லீமா. விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனைய நிகழ்த்திய வரலாற்று தாக்குதலாக ஓயாத அலைகள் தாக்குதல்கள் நிகழ்ந்தன.

களமுனையில் பாதிப்புக்கு உள்ளாகி களம் கையை விட்டு போய் விடுமோ என்கிற இடங்களில் ஒலிக்கும் இந்த "நான் லீமா கதைக்கிறேன் ...உங்களோடு களத்தில் இணைகிறேன்.." என்கிற வயர்லஸ் வார்த்தைகள் களமுனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது...போராளிகளுக்கு உற்சாகத்தையும், மனதைரியத்தையும் கொண்டுதது என்பது உண்மை...

ஓயாத அலைகள் மூன்றில் இத்தாவில் தரை இறக்கத்திற்காக அனைத்து படையணிகளின் பகுதிகளுடனும் லீமா கடல் மார்க்கமாக இத்தாவில் பகுதியில் தரையிறங்கி (34 ) நாட்கள் தொடர் தாக்குதலினை தொடுக்கிறார் .லீமா களத்தில் நிற்கிறார் என்ற உறுதியுடன் போராளிகள் களமுனையில் தாக்குதலை தொடுக்கிறார்கள். எந்த ஒரு தாக்குதல் அல்லது எதிர் தாக்குதல் என்றாலும் லீமா முழுமையாக தனது படையணிகளுடன் களமிறங்கி எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டினார் .


இந்த மாவீரனின் இழப்பு மிகபெரும் ஒரு இழப்பு தான்... இந்த வீரன் எந்த இனமாக இருந்தாலும் , எந்த நாட்டவனாக இருந்தாலும், இவனது வரலாற்றை தமிழில் பதிவு செய்யவேண்டும் என்கிற எனது ஆசை ஓரளவு நிறைவேறியதாக நினைக்கிறன்..

பால்ராஜ் அவர்களின் மரணம் தொடர்பாக புலிகளின் தலைமை விடுத்துள்ள அறிக்கைதலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
மே 21, 2008.


எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, 


விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது. 


பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும் சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.

தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல் உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள், எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன. 


பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" 

(வே.பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...