தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 23 ஜூலை, 2017

குழந்தை தொழிலாளியில் இருந்து ... சாதனை மனிதர் வரை


இளமையில் வறுமை என்பதை நன்கு அறிந்த சிறுவன் , தனது பள்ளி பருவத்தில் மூன்றாம் வகுப்பு கூட தாண்டமுடியாத நிலைமை. வறுமை தலைவிரித்தாடியது, இவனும் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை , சிறிதுகாலம் குழந்தை தொழிலாளியாக அவனும் தனது பங்களிப்பை அந்த வீட்டுக்கு வழங்கினான், அவனது தாய்  வீட்டு வேலைசெய்பவர் அவரது  தந்தை ஆறுமுகம் கூலி வேலை செய்பவர். படிக்க வேண்டும் என்று நினைத்த அந்த சிறுவன், அணுகியது அவனது தாய் வீட்டு வேலை செய்யும் வீட்டின் முதலாளி அம்மாவை. அவர் வேறு யாரும் இல்லை திருப்பூரை சேர்ந்த  சுதந்திர போராட்ட தியாகி திரு.எஸ்.ஏ.காதர் அவர்களது மனைவி திருமதி சலிமா காதர்.


அவரது உதவி மற்றும் வற்புறுத்தலின்  படி அந்த சிறுவனுக்கு மீண்டும்   பள்ளியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது, இருந்தாலும் தனது விடுமுறை நாட்களில் அந்த வீட்டில் ஏதாவது எடுபுடி வேலைகள் செய்வது அந்த சிறுவனது வழக்கம். நிம்மதியோடு மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால் விதி வேறு ரூபத்தில் விளையாடியது. அந்த சிறுவன் தனது ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாடு எங்கும் தீயாய் பரவிய நேரம், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. சிறுவனின் தாய் , கிடைத்ததடா வாய்ப்பு என்று சிறுவனை வேலைக்கு அனுப்பினார் தனது வறுமையின் காரணமாக .

மீண்டும் பள்ளிகள் துவங்கின, ஆனால் அச் சிறுவனான்  மீண்டும் பள்ளி செல்ல போராட வேண்டியிருந்தது. விசம் அருந்துவேன் என்கிற வார்த்தை அவனது பிஞ்சு வாயில்  இருந்து கேட்ட தாய் மனம் இளகி, அவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினாள்.

அந்த தாய்க்கு தெரியாது தனது மகன் கற்பிக்கும் தொழிலில் மிக பெரிய சேவை செய்ய  போகிறான் என்று.

அந்த சிறுவன் வேறு யாரும் அல்ல திரு.ஆறுமுகம் ஈஸ்வரன்  - திருப்பூரை பிறப்பிடமாக கொண்டவர். இவரை இப்படி அறிமுக படுத்தினால் சரியாகாது. ஜெய்வாபாய் ஈஸ்வரன்“ என்றால்  நிறைய பேருக்கு, குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்ட சுற்று வட்டாரங்களில் தெரியும். அது என்ன ஜெய்வாபாய்..? அப்படி என்ன இந்த ஈஸ்வரன் செய்து விட்டார் ...? பார்ப்போம் வாருங்கள் தோழர்களே.

1930-களில்   திருப்பூரில் பஞ்சு வியாபாரத்தில் புகழ் பெற்ற குடும்பம் “தேவ்ஜி ஆஷர்” என்கிற குஜராத்தி குடும்பம். இவரது மனைவிதான்  ஜெய்வாபாய். தனது 33 வது வயதில் பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல் நல குறைவால், இறக்கும் தருவாயில் தனது கணவரிடம், திருப்பூரில் பெண்களுக்கென்று தனியாக பள்ளி ஒன்றை கட்டுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார். தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் 1942 இல் வாளிபாளையம் துவக்க பள்ளி வளாகத்தில் அந்த பள்ளி துவங்க பட்டது. திரு ஆஷரின் விடா  முயற்சியால் அன்றைய சென்னை மாகாண அரசு சுமார் 7 ஏக்கர் 7229 சதுர அடி இடத்தை ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு வழங்கியது. இந்த இடத்தில்  திரு. ஆஷர் மற்றும் அவரது மகன்களான கிருஷ்ணகுமார் மற்றும் பிரதாப் ஆஷர் ஆகியோரது பங்களிப்புடன் பள்ளிக்கட்டிடம், விளையாட்டு மைதானம், தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டு  திருப்பூர் நகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டது.

எங்கிருந்தோ வந்து தமிழக பெண்களின் முன்னேற்றதிற்கு அவர்கள் அமைத்து கொடுத்த பள்ளி நகராட்சி வசம் வந்த பிறகு ஆரம்பத்தில் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தாலும், காலபோக்கில் அதன் செழிப்பை இழந்து தனது தலை எழுத்தை எண்ணி வருந்த தொடங்கியது.

“தேவ்ஜி ஆஷர்” மற்றும் “ஜெய்வாபாய்” அம்மையார்

சரி நாம் ஜெய்வாபாய் பற்றி பார்த்து விட்டோம், இதில் நமது நாயகன் ஈஸ்வரன் அங்கு எங்கு வந்தார், அவர் என்ன செய்தார்..? அதை பார்ப்போம்.

பள்ளி படிப்பை பதினொன்றாம் வகுப்பு வரை படித்த திரு ஈஸ்வரன், 1974-தர்மபுரியில் தொலை தொடர்புத்துறையில் வேலையில் சேர்ந்தார். பிறகு பி.எஸ்.என்.எல், திருப்பூரில் பணிபுரிந்து 2011 இல் ஓய்வு பெற்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் தனது தொலை தொடர்புத்துறை பணிக்கு இடையில் இந்த சமூகத்திற்கு என்ன செய்ய போகிறோம் என்கிற ஒரு எண்ண  ஓட்டம் அவரிடம் இருந்தது. அந்த உந்துதல் அவரது பணியை ஆரம்பிக்க ஒரு வாய்ப்பை தேடி கொண்டிருந்தது.


1987-ல் தன்னை  தமிழ் நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைத்து கொண்டார். இது அவரது வாழ்வில் ஒரு மாற்றத்தையும், தன்னால் சாதிக்க முடியும், இந்த சமூகத்திருக்கு ஏதாவது செய்வேன் என்றும்  உறுதி கொள்ள வைத்தது.

1989-ல் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தனது மகளை 6-ம்வகுப்பில் சேர்ப்பதற்கு சென்றவர், அப்பள்ளியின் நிலை கண்டு உள்ளம் பதறினார். அதே நேரம் அவரது மனம் முடிவு செய்தது, இதுதான் நமக்கான களம், இங்கு தான் நான் என்னை நிரூபிக்க போகிறேன்.

அப்பள்ளியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், பள்ளியில் இரவு நேரங்களில் நடைபெறும் சமூக விரோதச்செயல்களை தினமணியின் ஆராய்ச்சிமணிப்பகுதிக்கு எழுதியதோடு நில்லாமல் பள்ளியைச் சீர்படுத்த பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்தை 1989 ஜூலையில் மீண்டும் செயல்பட வைத்தார், இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒவ்வொரு வீடாக சென்று பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் செய்ய கூடிய செயல்களையும் எடுத்து கூறி ஒருவழியாக உயிர் கொடுத்தார். கழகத்தின் ஒருமித்த கருத்தை ஏற்று அவரே தலைமை பொறுப்பையும் ஏற்றார். அவர் பொறுப்பேற்கும் போது சுமார் மூவாயிரம் மாணவிகள் கல்வி கற்று வந்தார்கள். ஆங்கில வழி கல்வியும் தொடங்கப் பட்டிருந்தது.

அடிப்படைவசதிகள் என்பதே இல்லை என்னும் அளவிலேதான் அன்றைக்கு நிலைமை இருந்தது. குறிப்பாக கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள். மேம்படுத்தவேண்டியவை என்று தனியாக ஒன்றும் இல்லை, அனைத்தும் மேம்படுத்தவேண்டியவைதான். 1989 –இல் ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு இரும்பினால் ஆன தொட்டி மட்டும் இருந்தது. அதுவும் சத்துணவு உபயோகத்துக்கு மட்டுமே.  

கழிவறைகளின் நிலை மிக மோசம், ஆசிரியர்களுக்கு உலர் கழிவறைகள், மாணவிகளுக்கு அதுகூட கிடையாது. அதை தவிர சுற்றுபுறம் இருந்த கழிவறைஅற்ற குடும்பங்களுக்கு பள்ளிவளாகம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி இருந்தது.

கழிப்பறை வசதிக்காக ஒவ்வொரு பெற்றோரிடமும்  மாதம் ஒன்றிற்கு ரூபாய் ஒன்று நன்கொடையாக வாங்கப்பட்டது. ஓர் ஆண்டிற்கு 36000 ரூபாய் நன்கொடை, மேலும் சில நல்ல உள்ளங்கள் தந்த நன்கொடையை கொண்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. அடுத்த வருடங்களில் ஒரு பெற்றோர் வருடத்திற்கு ரூபாய் 25 நன்கொடை அளிக்க வேண்டப்பட்டது. அந்த தொகை மிகப்பெரும் உதவியாக இருந்தது. அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறின. பள்ளி புது பொலிவு பெற்றது. காவலாளிகள் நியமிக்க பட்டார்கள்.


1991– இல் கோவை அறிவொளி இயக்கத்தில் பணியாற்ற தொலை தொடர்பு இலாகாவில் இருந்து மாற்றுப்பணியில் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள சில பிரபல தனியார் பள்ளிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.வி.சங்கர் இ.அ.ப. அவர்கள் தலைமையில் நடைபெறும் அறிவொளி இயக்க கூட்டங்களுக்கு செல்லும்போது அப்பள்ளிகளில் இருந்த கட்டமைப்புகள், கணிப்பொறிகள் சுற்றுப்புறச்சூழல் கண்ட அவரது மனது ஜெய்வாபாய் பள்ளியின் நிலையை நினைத்து “வாடிய பயிரை கண்ட வள்ளலாராய்” வாடி நின்றது. இப்பள்ளி மாணவிகளுக்கும் கணிப்பொறிக் கல்வியைத்தர என்ன செய்யலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

அடிப்படை வசதிகள் மேம்பட ஆரம்பித்தவுடன் ஆங்கில வழி வகுப்புகளில் அதிக அளவில் மாணவிகள் சேர்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம்  காட்டினார்கள், விளைவு 1991-ல் சுயநிதி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

சுயநிதி பிரிவில் ஆண்டுக்கு ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலித்து அந்த நிதியை ஆதாரமாக கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  இந்த முயற்சி நல்ல பலனை வழங்கியது. அனைத்து வகுப்புகளிலும்,, கூடுதல் பிரிவுகள்   சுயநிதிப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு கூடுதல் மாணவர்கள் சேர்க்க பட்டார்கள்.

1991 –இல் வேதியியல் ஆய்வுகூடம் இல்லை என்கிற ஒன்று மிகப்பெரிய குறையாக இருந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக கூடத்தில் எடுக்க பட்ட முடிவின் படி நகராட்சியை அணுகினார்கள், அதே நேரம் பெற்றோர்களும் தங்களால் முடிந்த நன்கொடையை வழங்கினார்கள். தொழில் அதிபர்களை தொடர்பு கொண்ட போது வருமான வரி விலக்கு பெரும் வகையில் இருந்தால்  வழங்க தயாராக இருந்தார்கள். அங்கு ஒரு சிக்கல் எழுந்தது. வருமான வரி விலக்கு என்பது டிரஸ்ட் களுக்கு மட்டும் கிடைக்கும் என்று நிலை இருப்பதாக தெரிந்தது. உடனே ஒரு அவசர கூட்டம் நடத்த பட்டு பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் 1994 இல் பள்ளி வளர்ச்சி குழு அறக்கட்டளையாக மாற்றப்பட்டு 80-G யின் கீழ் வருமான வரி விலக்கும் பெறப்பட்டது. இந்த மாற்று யோசனையால் வேதியியல் ஆய்வு கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இட பற்றாக்குறையை  சமாளிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு 1993-முதல் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஆரம்பிக்க பட்டது. பல்வேறு வழிகளில் நிதி ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன.

களவாணியும் – கலைவாணியும்

திட்டம் தீட்டப்பட்டு திருப்பூரின் முக்கிய பிரமுகர்களை அணுகி நிதி உதவி கேட்கப்பட்டது. நல்ல மனம் படைத்த நிறுவனங்கள் கட்டி கொடுத்த வகுப்பறைகள்  மட்டும் 20.  அவை சென்னை சில்க்ஸ் இரண்டு, செல்வி பர்னிச்சர்ஸ் இரண்டு, மேகலா நிறுவனம் ஒன்று, 2008-ல் ஈஸ்ட்மேன் ஏற்றுமதி நிறுவனத்தார் ரூ. 85 லட்சம்  மதிப்பில் 15 வகுப்பறைகள் கட்டி தந்துள்ளனர். 

மத்தியரசு சார்பில் மூன்று வகுப்பறைகள், திரு. கே.சுப்பராயன் MLA அவர்கள் மூன்று வகுப்பறைகள், திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் MP  அவர்கள் 4 வகுப்பறைகளை தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தந்துள்ளனர்.

பள்ளியின் வைர விழாவினை முன்னிட்டு திருப்பூர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ10 லட்சம் நிதியில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் க.செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி அவர்களும் முயற்சிகள் எடுத்து திருப்பூர் மாநகராட்சி சார்பாக ரூ. 4 கோடி மதிப்பில் 33 வகுப்பறைகள் மற்றும் திறந்தவெளி கலையரங்கமும் கட்டி கொண்டுதுள்ளார்கள்

ஜெய்வாபாய் பள்ளியில் மட்டுமே 1000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்க பட்டுள்ளது. (1991-ல் 49 மரங்கள் இருந்தது) செடி, கொடிகள், வண்ணப்பறவை, வர்ணமீன்கள் காட்சியகம், செயற்கை நீருற்றில் துள்ளி விளையாடும் மீன்கள், பூத்துக்குலுங்கும் அல்லிக்குளங்கள், வறண்ட நில தாவர வகைகள், மழை நீர் சேகரிப்பு குளம், மூலிகைத்தோட்டம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

பருவம் எய்திய பெண் குழந்தைகள் நலனுக்காக “சானிட்டரி நாப்கின் பாய்லர்” என்கிற புதுமை திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை பார்பதற்கு  பல்வேறு மகளிர் பள்ளிகளில் இருந்து வருகை புரிந்து, அறிந்து  சென்ற ஒரு மாதிரி திட்டமாகும்.


உயிரோட்டத்துடன் காட்சியளிக்கும்படி இப்பள்ளியை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மாற்றியுள்ளதால் பல பள்ளிகளில் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் இந்த பள்ளியை நோக்கி வருவது வாடிக்கை.
திரு ஆறுமுகம் ஈஸ்வரன் வழிகாட்டுதலில் நடந்த மேலும் சில சாதனைகளை பாப்போம்;

1994-95-ம் கல்வியாண்டில் வணிக கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் கொண்ட ஆங்கில வழி வகுப்புகள் சுய நிதிப் பிரிவில் தொடங்கப்பட்டது. ரூ.2,500 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்பட்ட காரணத்தால் அதிக அளவில் மாணவிகள் சேர்ந்தனர். 50-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டு நவீன கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைக்கப்பட்டது. சிறப்பான கம்ப்யூட்டர் கல்வியை வழங்கியதற்கான தேசிய விருது மக்களின் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின்  கரங்களால்  2004-ம் ஆண்டு கிடைத்தது

மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களுடன் திரு ஆறுமுகம் ஈஸ்வரன்.

சுற்றுபுறங்களில் தண்ணிர் தட்டுப்பாடு எற்படவும், எங்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் சுமார் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு மழைநீர் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. விளைவு அபரிதமாக இருந்தது. பள்ளி கிணறு வற்றாத ஜீவநதியாக மாறியது.

மாணவிகள் உருவாக்கிய மற்றொரு மழைநீர் சேமிப்புத் தொட்டி தமிழ்நாட்டுக்கே முன்னோடியாக விளங்கியது. இதற்காக இந்த பள்ளி மாணவிகளை 2002-ம் ஆண்டு நேரில் வரவழைத்து பாராட்டிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ரூ.10 ஆயிரம் பரிசும் வழங்கினார்.
வேறு எங்குமே இல்லாத அறிவியல் பூங்கா ரூ.1.50 லட்சம் செலவில் உரு வாக்கப்பட்டது.இவ்வாறு பள்ளியின் வசதிகளும், கல்வியின் தரமும் உயர உயர மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக ஆங்கில வழி கல்வியும், கம்ப்யூட்டர் கல்வியும் சிறப்பாக இருந்ததால் அதிகபட்சமாக 2009-10-ம் கல்வியாண்டில் 7,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளியில் சேர்ந்தனர்.

அதைபோல் ரோட்டரி சங்கத்திற்கும் பள்ளிக்கும் இடையிலான சுமார் ஒரு ஏக்கர் நிலம்  பற்றிய வழக்கு. இவரது விடா முயற்சியால் அந்த நிலம் மீண்டும் பள்ளிவசம் ஒப்படைக்க பட்டுள்ளது. இந்த தொகுப்பில் சொல்லபடாத பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நிதி ஆதாரங்கள் உருவாக்க பட்டது.

மேலும் சில சிறப்பான விசயங்களை பார்ப்போம்;
1
  •   சுமார் 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள்  சமர்பிக்கப்பட்டுள்ளது.

  •   இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதைபெற்றுள்ளது.

  •        மூன்று முறை இந்திய விஞ்ஞானிகளின்  மாநாட்டில் பங்கேற்றுள்ளது.

  •      2005-ம் ஆண்டில் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான பரிசையும்  பெற்றுள்ளது.

  •      2005-ம் ஆண்டு மாணவியர் சுற்றுலா சென்ற இடம் ஜனாதிபதி மாளிகை , அதற்காக ரயில்வே நிர்வாகத்தோடு மிகபெரும் போராட்டம் நடத்தி சலுகை விலையில் அழைத்து சென்றார்.


இவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் இப்பள்ளியின் தலைமையாசிரியைகள் திருமதி ஆ.ஜரீன்பானுபேகம் 2002-ம் ஆண்டிலும், திருமதி அ.விஜயாஆனந்தம் 2007-ம் ஆண்டிலும்  தேசிய நல்லாசிரியர் விருது பெற்று சாதனை படைத்த பள்ளியாகவும் திகழ்கிறது.


ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், சட்டசபை மற்றும் நாடாளும்மன்ற உறுப்பினர்கள் இப்படி எத்தனையோ பேர் உதவி புரிந்தாலும், இவர்கள் அனைவரயும் ஒன்றிணைத்து, திட்டங்கள் தீட்டி, நூறு சதவீதம் திட்டங்கள் நிறைவேறும்வரை ஒருங்கிணைத்து செயல்பட்டு, எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல், தனது பனி காலத்தில்  விடுமுறை என்று எடுத்தால்  இந்த பள்ளியின்  வேலைகளுக்கு மட்டுமே என்கிற கொள்கையோடு பணிபுரிந்து, ( கிட்டத்தட்ட ஆறு மாத விடுமுறை ஊதியத்தை இழந்து– பணிமூப்பு 2011) செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளார் திரு ஆறுமுகம் ஈஸ்வரன். அவரது தாய் அவரை அந்த வறுமையிலும் படிக்கச் வைத்ததற்கும், தன்னை குழந்தை தொழிலாளர் என்கிற நிலையில் இருந்து மீட்ட திருமதி சலீமா காதர் அவர்களுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய அளவிலே தன்னை நிருபித்தவர். தனது எண்ணம் செயல் அனைத்தையும் பள்ளியின் முன்னேற்றம், அதற்கு என்ன செய்வது என்பதற்காகவே  கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு வருடங்கள் தவ வாழ்க்கை வாழ்த்திருக்கிறார். அவரது அனுபவம் மற்ற பள்ளிகளுக்கும் , பெற்றோர் சங்க நிர்வாகிகளுக்கும் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.

சில தனிப்பட்ட காரணம் என்று சொல்ல பட்டாலும், அங்கு நிலவிய சூழலில் தனது பணியை தொடரமுடியாமல் 2013 ஆம் ஆண்டு விலகி இன்றுவரை மற்ற பள்ளிகளுக்கு முடிந்தவரை உதவி வருகிறார். தற்போது அவர் செல்லும் பள்ளிகளுக்கு எல்லாம் ஜப்பானிய காகிதத்தை வைத்து கலை பொருட்களை செய்யகூடிய “ஒரிகாமி” என்கிற ஒன்றை சொல்லி கொடுக்கின்றார், பள்ளி மாணவர்களுக்கான சிறிய அறிவியல் திட்டங்களை சொல்லி கொடுக்கிறார்.


“ஒரிகாமி “ – என்கிற ஜப்பானிய பேப்பர் ஆர்ட்

மற்ற பள்ளிகள் தங்களை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணினால் திரு.ஆறுமுகம் ஈஸ்வரனை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள அலைபேசி என் : 9443024086
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...