தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 25 ஜூன், 2017

பரம் வீர் சக்ரா மேஜர் ராமசாமி பரமேஸ்வரன்

இந்தவாரம் நமது விருந்தினர் இந்திய இராணுவத்தின் உச்சபட்ச விருதாகிய பரம் வீர் சக்ரா என்கிற விருதை மரணத்திற்கு பின் பெற்ற  மேஜர் ராமசாமி பரமேஸ்வரன்  அவர்கள்.


யார் இந்த ராமசாமி பரமேஸ்வரன், அவருக்கு எதற்காக பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது...? எந்த நிகழ்வில் தனது உயிரை தியாகம் செய்தார்....வாருங்கள் தோழர்களே ஒரு உன்னத மனிதரை பற்றி பார்போம் ...


 பரம் வீர் சக்ரா - மேஜர் ராமசாமி பரமேஸ்வரன்

மேஜர் ராமசாமி பரமேஸ்வரன், 13 செப்டம்பர் 1946 அன்று மும்பையில் கே.எஸ்.ராமசாமி அய்யர் மற்றும் ஜானகி அம்மாவிற்கு மகனாக மாதுங்காவில் உள்ள டாக்டர் கருணாகரன் நர்சிங் ஹோமில் பிறந்தார்.

பள்ளிபடிப்பை முடித்த ராமசாமி பரமேஸ்வரன் , மும்பையில் உள்ள SIES
 (SOUTH INDIAN EDUCATIOINAL SOCIETY) தென் இந்திய கல்வி
 சங்கத்தால் நடத்தப்படும் ஒரு கல்லூரியில் அறிவியலில்  இளம் நிலை பட்டம்
 பெற்றார். இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்கிற தனது 
ஆசையை தந்தையரிடம் வெளிபடுத்தினார். அவரது தந்தை நீ இளநிலை
 கல்லூரி படிப்பை முடித்த பிறகு பார்க்கலாம் , இப்பொழுது கல்லூரியில் 
சேருவதற்கான வேலையை பார் என்றார்.  இளநிலை கல்லூரி படிப்பை 
முடித்துவிட்டு, UPSC பரிட்சையை எழுதி ராணுவத்தில் சேருவதற்கு தேர்வு 
பெற்றார். 
 
1971 இல், இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெறும் நாட்களில் அவர் சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி அகாடமியில் சேர்ந்தார். 1972 ஆம் ஆண்டில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து வெளியேறினார்.

பயிற்சி முடித்த பரமேஸ்வரன்  இந்திய இராணுவத்தின் சிறப்பு மிக்க காலாட்படைப் பிரிவான 15 வது மஹர் படைப்பிரிவில் மகாராஷ்டிராவில்  பணியில் சேர்ந்தார். இந்த மஹர் படைப்பிரிவு   இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், சமுகங்களிருந்தும்   துருப்புக்களைக் கொண்ட இந்திய ராணுவத்தின்  ஒரே படையணியாகும்.  இந்த பிரிவில் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றி பல்வேறு  சிறப்பு பயிற்சிகளையும், பதவி உயர்வுகளையும் பெற்றார்.

இந்த கால கட்டத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் தலையீட்டில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே, அப்போதைய இலங்கை ஜனாதிபதி மற்றும்  இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் இடையே ஒரு ஒப்பந்தம் ஜூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் கையெழுத்து ஆகியது. 
இலங்கை அமைதி காக்கும் ஒப்பந்தம்  

( யாருடைய சார்பில், யாருடைய சம்மதத்தில்  இந்திய பிரதமர் கையெழுத்து இட்டார் என்பது தெரியாது) அந்த கையெழுத்து அவரது வாழ்வை முடிக்கும் ஒன்று என்று தெரியாமல் இந்திய பிரதமர் ராஜீவ் இட்ட ஒரு கையெழுத்து ஆகும். அந்த அரசியலுக்குள் நாம் போக வேண்டாம்.

இலங்கையை  ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக அறிவித்து, தமிழர் மற்றும் முஸ்லீம் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை ஒருங்கிணைத்து , சுய ஆட்சி அதிகாரம் கொண்ட மாகானசபையாக அறிவிப்பது என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்.

இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய ராணுவம், இந்திய அமைதி காக்கும் படை என்கிற பெயரில் இலங்கைக்கு செல்ல  தயாராகியது.

பரமேஸ்வரன் ராமசாமி இந்திய அமைதி காக்கும் படைக்கு தேர்வுசெய்யப்பட்டார் . முதல் காரணம் அங்கு நடைபெறவிருக்கும் இந்த அமைதிகாக்கும் பணி  தமிழர்கள் நிறைந்த  பகுதிகளில் செயல்படுத்த பட வேண்டும். சாமர்த்தியமாக பேசி விடுதலை புலிகளிடம் இருந்து ஆயுதங்களை திரும்ப பெறவேண்டும். அமைதியை நிலைநாட்டவேண்டும், இவ்வளவையும் செய்ய ஒரு தமிழர் ராணுவத்தில் இருந்தால்  சரியாக இருக்கும் என்று நினைத்து மேஜர் பரமேஸ்வரன் இலங்கை மண்ணை தொட்ட இந்திய ராணுவத்தின் முதல் குழுவில்  அனுப்பபட்டார். இலங்கை மண்ணை தொடும்போது பரமேஸ்வரன் ராமசாமி தான் திரும்பிவரபோவது இல்லை, காவியமாக போகிறோம் என்று நினைத்து பார்க்க வில்லை.

இந்திய ராணுவமும் நினைக்கவில்லை தாங்கள் போருக்கு போகிறோம் என்று. எப்படி தென்காசியில் இடைதேர்தல் என்றால்  ஒரு ராணுவ அணி வந்திருந்து, கொடி அணிவகுப்பு நடந்தி பொதுமக்கள் மத்தியில் ஒரு தைரியமோ அல்லது கட்சிகாரர்கள் மத்தியில் பயமோ  ஏதோ ஒன்றை ஏற்படுத்துவதுபோல்  சராசரியான ஆயுதம் தாங்கிய ஒரு அணி அங்கு சென்றது. அவர்களுக்கு அமைதியை நிலை நாட்டவேண்டும், ஆயுதங்களை ஒப்படைப்பார்கள் அவர்களிடம் இருந்து அவற்றை திரும்ப பெறவேண்டும் போன்ற கட்டளைகளோடு இலங்கை மண்ணில் கால் வைத்தார்கள்.


ஆனால் இலங்கை சென்றபிறகுதான் இந்தியாவிற்கு புரிந்தது அது  அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இந்திய இராணுவத்தின் உத்தரவிற்கு  பணிந்து ஆயுதங்களை ஒப்படைக்க, இது இந்தியாவும்  அல்ல. சிறிய குழுக்கள் தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தன.  விடுதலைப்புலிகள் முதலில் ஒத்துகொண்டாலும் (நிர்பந்திக்க பட்டார்கள் என்பது விடுதலை புலிகளின் குற்ற சாட்டு ) பிறகு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தார்கள். 

விடுதலைப்புலிகள் மேல் இந்திய ராணுவதிருக்கு ஒரு பாசம் இருந்தது, அன்றைய விடுதலைப்புலிகளின்  முதல் நிலை தளபதிகள் அனைவரும் இந்திய இராணுவத்தாலும், “ரா” என்று சொல்லகூடிய புலனாய்வு அமைப்பாலும் பயிற்சி கொடுக்கபட்டவர்கள். மேலும் இந்திய இராணுவத்திற்கு   அவர்கள் மீது பயம் கிடையாது, அவர்கள் நம்மிடம் பயின்றவர்கள் , நாம் தான் அவர்களுக்கு குரு, நம்மை மீறி ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அதிகம் இருந்தது. இந்திய பிரதமர் ராஜீவுடன் நடந்த உரையாடலில் கூட புலிகள் நமது பையன்கள்  அவர்களை பற்றி கவலைபடவேண்டாம் என்பதே இந்திய இராணுவத்தின் பதிலாக இருந்தது.


விடுதலைப்புலிகள் கொரில்லா போர் முறையை பின்பற்றினார்கள். அவர்கள் இருந்த இடம் கொரில்லா போர் முறைக்கு என்றே தயாரிக்கபட்ட வகையில் காடுகளும், மரங்களும் , சதுப்பு நில காடுகளும் அதிகம் கொண்டவையாக இருந்தது.  இந்திய ராணுவம் சென்ற வேலை வேறு, ஆனால் அதிகாரவர்கத்தின் தவறான வழிகாட்டுதலால், முடிவுகளால் , யாரை பாதுகாக்க அங்கு சென்றதோ , யாருக்காக இலங்கை விவகாரத்தில் இட்டதோ, அவர்களை எதிர்த்து போர்  புரிய வேண்டிய ஒரு சூழ்நிலையை  ஏற்படுத்திகொண்டது. முடிவு மிகபெரிய அளவிலான உயிர் இழப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்  அமெரிகாவிற்கு ஒரு வியட்நாம் போல் , இந்தியாவிற்கு  - “இலங்கை” என்றே கூறலாம்.

சரி இந்த போரை பற்றி பேசினால் அதை பற்றி பலாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் எழுத வேண்டி வரும். நமது நோக்கம் அது இல்லை.

இலங்கை சென்ற இந்திய படை அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.  இந்த நிலைமையில் ஒப்பந்தபடி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்கள். தமிழர் வாழும் மாகாணங்களில் ஆயுத குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கும் போது , விடுதலை புலிகள் அந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்கள், ராணுவத்துக்கு சற்று நிம்மதியை கொடுக்கும் ஒரு அறிவிப்பாக இருந்தது. பொது மக்களை சில காரணக்களுக்காக அப்புறபடுத்தி, முகாம்களில் தங்கவைக்க நேர்ந்தது. மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் தமிழர் தங்க வைக்கபட்டிருந்த  முகாம்களுக்கு நேரிடையாக சென்று  அவர்களது குறைகளை கேட்டு உடனடி தீர்வுகளை ஏற்படுத்தினார். தமிழர்களுக்கு பிடித்த ராணுவ அதிகாரியாகவும் இருந்தார்.

ஆயுதங்களை களையும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் ஒத்துழைக்காமல், காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். ஆயுதங்களை களையும் நடவடிக்கைக்கு – OPERATION PAWAN – என்று பெயரிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதில் யாழ்பல்கலையில் வான் ஊர்திகளின் மூலம் சிறப்பு அணியை களம் இறக்குவது என்கிற திட்டம் தயாரிக்கப்பட்டு, நள்ளிரவில்  இறங்க  தயார் ஆனார்கள் . இந்த திட்டம் விடுதலை  புலிகளுக்கு எப்படியோ தெரிந்து, யாழ் பல்கலை உதைபந்து மைதானம், மறைந்திருந்து தாக்கும் வண்ணம் சுற்றிவளைக்கபட்டது.

கிட்டத்தட்ட  முப்பதிற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் மைதானத்தில் இறங்கியவுடன் சுட்டுகொள்ளபட்டார்கள். இந்திய ராணுவதிற்க்கு மிகப்பெரும் ஒரு அடியாக இருந்தது. சுதாகரித்துகொண்ட ராணுவம் கூடுதல் படை அணியையும், கப்பல் படையையும், கவச வாகனங்களையும் யாழ்ப்பாணத்தில்  குவித்தது. சரியாக பதினாறு  நாட்கள் சண்டைக்கு பிறகு யாழ்ப்பாணம் இந்திய படையின் கட்டுபாட்டுக்குள் வந்தது.

ஆனாலும் சண்டை தொடர்ந்தவண்ணம் இருந்தது. கொரில்லா யுத்த முறையை பின்பற்றி கடுமையாக தாக்கினார்கள். பொதுமக்களோடு பொதுமக்களாக கலந்து இருப்பதால் புலிகள் என்று பிரித்துபார்க முடியவில்லை. காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். ஆயுத பரிமாற்றம் ஏதாவது ஒருவகையில் தினமும் இருந்தது. இந்திய ராணுவம் புலிகளை ஒடுக்கி தங்கள் முழு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர  தீவிர முயற்சியை மேற்கொண்டது. புதிய இடம், புதிய அனுபவம், எதிரி யார் என்றே தெரியாத ஒரு யுத்தமாக இருந்தது.

இந்த நிலையில் பரமேஸ்வரன் தனது  மேஹர் அணியுடன் இணைவதற்கு வானூர்தியில் சென்றார், இறங்கும் இடம் விடுதலை புலிகளின் கடுமையாக தாக்குதல் நடவடிக்கையால் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டது.

தன்  அணியுடன் புதிய ஒரு நிலையை ஏற்படுத்தி , ராணுவ கட்டுப்பாட்டு அறையையும் ஏற்படுத்திகொண்டார்.  இந்நிலையில் நவம்பர் மாதம்  24 ஆம்  தேதி  மாலையில் ஒரு நம்ப தகுந்த செய்தி கிடைத்தது. கந்தரோடை எனும் இடத்தில ஆயுத பரிமாற்றம் நடக்க இருக்கிறது. தர்மலிங்கம் என்பவரது  வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தான் அந்த செய்தி.  இந்திய ராணுவம் முதலில் புலிகளை கொல்வதை விட, அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்று ஆயுத கடத்தல்களை தடுத்து நிறுத்தி  பறிமுதல் செய்வதில் முழு கவனம் செலுத்தியது.

மேலும் பாரி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜெனரல் பரமேஸ்வரன் இந்த உளவு செய்திக்கு செவிமடுத்து, உடனடியாக தனது அணியில் சிலரை அழைத்துக்கொண்டு கந்தரோடையில் திரு தர்மலிங்கம் இல்லத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அவர் செல்வதற்கு முன் ஆயுத பரிமாற்றங்கள் முடிந்து வெறும் வீடாக இருந்தது. நடு இரவில் நடந்த சோதனையில் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்பது உறுதியாகிய நிலையில், உளவு அமைப்புக்கு உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, தனது சிறிய அணியை திரும்ப அலைத்துக்கொண்டு தங்கள் முகாமுக்கு திரும்பிகொண்டிருந்தார்.

அதிகாலை மணி ஐந்தை  தொடும் வேள அவர்கள்  நடந்துவந்த பாதையில் இருந்த கோவில் அருகில் நாய் குலைக்கும் ஓசை கேட்டு பரமேஸ்வரனின் அணி திடுக்கிட்டார்கள். இங்கு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லும்போதே அவர்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சீறி வந்தன. பரமேஸ்வரன் உடனே தனது அணிக்கு உத்தரவிட்டார். நான் கூடுதல் படைகளை வரசொல்கிறேன், அவர்கள் வரும் வரை நாம் நம்மை பாதுகாத்துகொண்டு போர் புரிய வேண்டும். நாம் உடனே ஒரு மறைவிடத்தை தேடி அங்கிருத்து அவர்களை தாக்குவோம் என்று உத்தரவிட்டு அனைவரும் ஒரு மறைவிடத்தில் பதுங்கியபடி பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

ஆனால் புலிகள், கோவிலின் வசதியான மறைவிடங்களில் இருந்து தொடர்ந்து தாக்குதல் தொடுத்தார்கள். மேஜர் பரமேஸ்வரன் திட்டத்தை மாற்றி அவர்கள் இருந்த கோவிலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்... ஒரு கட்டத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் விடுதலை புலிகள் தங்கள் ஆயுதங்களை முடிந்தவரை எடுத்துக்குக்கொண்டு தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது ஒருவன் சுட்ட குண்டு மேஜர் பரமேஸ்வரனின் மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தில் பட்டு கீழே விழுந்தது. தனது சிறிய படைஅணியை மிகவும் திறமையாக கையாண்டு எதிரிகளை புறமுதுகிட வைத்தார்.

புலிகள் தப்பிக்கும் முயற்சியை தடுக்க முடிவெடுத்து தாக்குதலை அதிக படுத்தினார் பரமேவரன்,  இந்நிலையில் அவரது மார்பில்  எதிரிகளின் குறியற்ற தாக்குதல் பட்டது. தனது உயிரை  பற்றி கவலை படாமல் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து, பெருவாரியான ஆயுதங்களை கைப்பற்றினார்.  தன்னோடு யிருந்த படை அணியில் இரண்டு வீரர்களை இழந்தாலும், புலிகளுக்கு அதிக சேதாரமும் ஒருவர் உயிருடனும் பிடிபட்டார்.

இந்த எதிர்பாராத கொரில்லா தாக்குதலில் தன்னால் முடித்தவரை போராடி தனது உயிரை தியாகம் செய்தார் பாரி பாய் என்று அன்போடு அழைக்கப்பட்ட மேஜர் ராமசாமி பரமேஸ்வரன். அவர் கை கடிகாரம் சரியாக எட்டு பத்து என்று மணி காட்டி நின்று போய் இருந்தது.


சென்னையில் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் படித்த ராணுவ அதிகாரிகளின் பயிற்சி அகாடமியில் அமைகபட்டுள்ள சிலை

அவருக்கு ராணுவத்தால் பரம் வீர் சக்ரா விருது வழங்க பட்டது. இந்த நல்ல ஆத்மா சிங்களவரின் சூழ்சிக்கு பலியான இந்திய உயர்மட்ட தலைவர்களின் உத்தரவை, ஒரு தமிழனாக இருந்தாலும், இந்திய ராணுவ கட்டளைக்கு அடிபணிந்து கடமையை செய்து, தனது இன்னுயிரையும்   தியாகம் செய்தது மறக்கமுடியாத ஒரு வீர நிகழ்வுதான்.


பரம் வீர் சக்ரா

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள இந்திய அமைதி படையின் நினைவு தூணில் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் – மஹா வீர் சக்ரா பெற்றதாக தகுதி குறைத்து பெயர் பதிவிட பட்டுள்ளது ஒரு வருந்த தகுந்த நிகழ்வு.


இலங்கையில் நிறுவப்பட்டுள்ள இந்திய அமைதி படையின் நினைவு தூண் 

இலங்கையில் உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரும் சரி இலங்கை ராணுவதிருக்கு எதிராக போராடி உயிர் நீத்த விடுதலை புலிகளும் சரி என்னை பொறுத்தவரை “மா வீரர்கள்” தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...