தொடரும் நண்பர்கள்

ஞாயிறு, 9 ஜூலை, 2017

உலக நாயகன் – சகல கலா வல்லவன்..

எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண மனிதர், தன் உழைப்பால் தன்னை உருவாக்கி கொண்டவர், உலகம் அவரை உற்று நோக்குகிறது, அவர் என்ன செய்தாலும் அது உலக அரசியலில் பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. உலகின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர், அரசியல் தவிர தனிப்பட்ட ஒரு மனிதனால் இத்தனை கலைகளையும் தெரிந்து வைத்திருக்க முடியுமா? என்று அனைவராலும் வியக்கவைக்கும் ஒரு தலைவர் அவர்... அவர் வேறு யாரும் இல்லை ரசியாவின் அதிபர் விளாடிமிர் புடின் தான் அந்த உலக நாயகன்...சகல கலா வல்லவன்... அவரை பற்றி படிப்பதே ஒரு இனிய அனுபவமாக தான் உள்ளது...வாருங்கள் தோழர்களே அவரை பற்றி சிறிதளவு பார்போம்... (முழுமையாக பார்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் பக்கங்கள் வேண்டும் )



விளாடிமிர் புடின் அக்டோபர் ஏழு , 1952 இல் விளாடிமிர் மற்றும் மரியா ஷேலோமொவா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பிறந்த தினத்தில் அவரது தாய் தந்தை எண்ணியிருக்க மாட்டார்கள், அவர்களது செல்ல மகன் இந்த நாட்டை ஆளபோகிறான் என்று.. ஏன் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள்... காரணம் அன்றைய தேதியில் புடினின் தந்தை விளாடிமிர் இராணுவ வண்டிகள் சரிசெய்யும் நிலையத்தில் ஒரு சாதாரண காவலாளியாக இருந்தார்.. அவர்களது குடும்பம் ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் தான்...

தாய்,  தந்தை 


முதல் உலக போருக்கு பிறகு புடினின் குடும்பம் சைன்ட் பீட்டர்ஸ் பெர்க் நகருக்கு குடிபெயர்ந்தது. கம்மயுனல் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் குடியிருந்தார்கள் . அந்த காலகட்டத்தில் ஐந்து என்ன பத்து மாடிகள் கூட படி ஏறி தான் போகவேண்டியிருந்தது. இன்றைக்கு மனிதனை சோம்பேறிகளாக்கும் லிப்ட் அல்லது நகரும் படிக்கட்டுகள் என்று எந்த வசதியும் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கிடையாது.

1960 இல் இருந்து -1968 வரை புடின் லெனின்கிராடில் ஆரம்ப பள்ளி எண் 193 இல் கல்வி பயின்றார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு, அவர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கீழ் ஒரு வேதியியலை முக்கிய பாடமாக கொண்ட படிப்பை பள்ளி என் 281இல் படித்து வெற்றிகரகமாக 1970 இல் வெளிவந்தார்..

பள்ளி பருவத்தை பொறுத்தவரை புடின் அப்படி ஒன்றும் சிறந்து விளங்கிய மாணவர் இல்லை. ஆசிரியர்களுக்கு இவர் எப்பொழுதும் ஒரு தலைவலியாக தான் இருந்திருக்கிறார். 




அவரது ஆசிரியை வெரா குரேவிச், புடின் பற்றிய அவரது நினைவுகளை கூறும்போது , அவர் அவரது ஐந்தாம் வகுப்பில் கூட தான் யார் என்கிற ஒரு உணர்வு இல்லாமல் தான் இருந்தார். ஆனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்று புரிந்தது, மிகவும் ஆற்றல் மற்றும் சிறந்த குணாதிசியங்களை கொண்டவராக இருந்தார், மேலும் மொழியியலில் மிக்க ஆர்வம் உடையவராகவும் இருந்தார். எதிர் காலத்தில் சிறந்து விளங்கும் ஒருவனாக வருவான் என்று நினைத்து அவன் மீது நான் எனது கவனத்தை செலுத்தினேன். 

ஆறாவது வகுப்பு வரை, புடின் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவருடைய ஆசிரியரான வெரா குரேவிச், அவரால் சிறந்த மாணவனாக முடியும் என்று எண்ணி புடின்னின் தந்தையாரை சந்தித்து, நீங்கள் அவனுக்கு ஊக்கத்தையும் , ஆர்வத்தையும் கொடுங்கள் அவன் சிறந்த மாணவனாக வருவான் என்று வலியுறுத்தினார். ஆனால் அவரது தந்தை அதற்கான எந்த முயற்சியும் எடுக்க வில்லை.

புடின் தான் ஒரு போராளி என்பதை தனது ஏழாம் வகுப்பில் உணர்ந்து கொண்டார். விளைவு புடின் தன்னைப் பற்றிய எண்ணத்தை அனைவரிடத்திலும் மாற்ற ஆரம்பித்தார். அவர் தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் என்பதை நிருபித்தார், அவர் தன்னை உணர்ந்துகொண்ட தருணம் அவரது வாழ்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுதியது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் என்று சொல்ல கூடிய தற்காப்பு கலைகளான ஜூடோ, கரத்தே போன்ற கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக புடின் இருந்தார். இந்த கலைகள் அவர்க்கு வாழ்கையில் ஒழுக்கத்தையும், நேரம் தவறாமையையும் , தன்னம்பிக்கையையும் வழங்கின, அதே வேளை வலுவுள்ள ஒரு புடினையும் உருவாக்கியது. 168 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஒரு வாலிபன், தனது தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள தேர்ந்து எடுத்த ஒன்றுதான் ஜூடோவும் கராத்தேவும், பிற விளையாட்டு கலைகளும் .

இந்த தன்னம்பிக்கை அவரை படிப்பிலும் ஆதிக்கம் செலுத்த உதவியது. வகுப்பில் முதல் நிலையை தொட்டார்.. மேலும் நமது தேசிய மாணவர் இயக்கம் (NCC) போன்று ஒரு இயக்கத்தில் சேர்ந்து ஒருவருடம் முடிவதற்கு முன் மாணவர் தலைவராக பொறுப்பு ஏற்றுகொண்டார். அந்த பதவி அவரது தலைமை பண்பை வெளிபடுத்த ஒரு வாய்ப்பாக இருந்தது.

1970 இல், விளாடிமிர் புடின் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தில் சட்ட துறையின் இளநிலை பட்ட மாணவனாக சேர்ந்தார்,, 1975 இல் பட்டம் பெற்றார். 1980 களின் ஆரம்பத்தில் , மாஸ்கோவில் கே.ஜி.பி பள்ளி No. 1 இல் \ புடின் படித்தார். படிப்பை முடிப்பதற்கு முன் தான் ஒரு உளவுத்துறை அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தார், பின்னர் மாலுமியாக ஆசைபட்டார், விமான ஓட்டியாக வேண்டும் என்று விரும்பினார், ஆனால் முதலில் நினைத்ததே சரி என்று தனது முடிவை மாற்றி கொண்டு கே.ஜி.பி என்று சொல்ல கூடிய ரசிய உளவுத்துறையில் பணியில் சேர்ந்தார் . 

கே.ஜி.பி யில் சேர்ந்தபின் பல சிறப்பு பயிற்சிகளும் கவுன்ட்டர் இன்டலிஜென்ஸ் என்கிற சிறப்பு உளவுத்துறையிலும் பயிற்சி பெற்றுகொண்டார். மேலும் கே.ஜி.பி அதிகாரியாக கிழக்கு ஜெர்மனியில் பணிபுரிந்தார். இந்த காலகட்டம் புடினின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. தனது வாழ்க்கை துணையை இங்குதான் சந்தித்தார். அவரது திருமணம் இங்குதான் நடந்தது. ஜெர்மானிய மொழியை நன்கு பயின்றார். ஐரோப்பிய அரசியலையும் கூர்ந்து கவனித்து கற்றுகொண்டார்.

திருமண நிகழ்வு 

1990 வரை கிழக்கு ஜெர்மனியில் பணிபுரிந்துவிட்டு ரசியா திரும்பிய புடின் அவர்படித்த லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தில் பதிவாளருக்கு அடுத்த நிலையில் பணி அமர்த்தப்பட்டார். 1996 இல் சர்வதேச அரசியல் துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி அவரை மாஸ்கோ நகருக்கு குடிபெயர வைத்தது. இந்த நிகழ்வு அவரது வாழ்கையில் ஒரு முக்கியமான ஒன்றாக அமைந்தது.

1996 ஆம் ஆண்டில், புடின் அவரது குடும்பத்துடன் மாஸ்கோவிற்கு சென்றார், அங்கு சென்ற சில மாதங்களில் அவர் ஜனாதிபதி சொத்து நிர்வாக இயக்குனரகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிகள் புடினை தேடி வந்தது, அவரது விடா முயற்சியும், எந்த பதவியாக இருந்தாலும் அதை தனக்கு விடப்பட்ட சவாலாக நினைத்து, தனது அனுபவங்களையும், மாறுபட்ட சிந்தனையும் பெரும் வெற்றிகளை பெற்றுத்தந்தன. தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை தனது தலைமை உணரும்வண்ணம் அவரது பணி இருந்தது , அடுத்த, அடுத்த பதவிகள் அவரை தேடி வந்தது. 

பல்வேறு உயர்வுகளை பெற்று 1998 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் முதல் துணைத் தலைவராக புடின் நியமிக்கப்பட்டார், ஜூலை 1998 இல் அவர் பெடரல் செக்யூரிட்டி சர்வீசஸின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மார்ச் 1999 முதல், அவர் ரஷியன் கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் பதவி வகித்தார். 

முன்னால் அதிபர் மிச்சேல் கோர்பச்சேவுடன்

அமெரிக்காவும், ரசியாவும் ஒருவரை ஒருவர் எதிரியாக நினைத்து , ஒருவரை ஒருவர் உளவு பார்ப்பதே வேலையாய், நான் தான் பெரியவன் என்கிற வல்லரசு போட்டியில் ரசியா சிதைந்து போனபோது கே.ஜி.பி யின் வேலை மிக அதிகமாக இருந்தது. அமெரிக்கா தவிர உள்நாட்டு குழப்பங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பிரிந்து சென்ற பங்காளிகளின் நடவடிக்கைகளை உளவு அறிந்துச் சொல்ல வேண்டும், பங்காளி நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உளவு நடவடிக்கைகளை, தூண்டுதல்களை வேரறுக்க வேண்டும் இப்படி எத்தனையோ பணி. இந்த பணிகளில் ஈடுபட்ட காலங்கள் புடினை செம்மை படுத்தின.

அன்றைய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் புடின் மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர், அவரது திறமை மீது நம்பிக்கை கொண்டவர். ஆகஸ்ட் 1999-ல், புடினுக்கு மிக முக்கிய பொறுப்பான ரஷ்ய அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக நியமித்தார். இது புடினை தேடிவந்த பதவி.. இந்த பதவி புடின் யார் என்று உலக தலைவர்களால் கூர்ந்து கவனிக்கவைத்த ஒரு நிகழ்வு., அமெரிக்க உளவுத்துறை CIA புடின் பற்றிய வரலாறு, பூகோளம் என்று அனைத்தையும் தோண்டி துருவ ஆரம்பித்தது. அவருக்கு பிடித்த உள்ளாடை நிறம் என்ன என்பது வரைக்கும் அமெரிக்கா தெரிந்து கொள்ள ஆசைப்பட்டது.


முதல் முறை பதவி ஏற்றவுடன் புடின் மற்றும் போரிஸ் யெல்ட்சின்


2000 ஆம் வருடம், காலம் புடினுக்கு மற்றும் ஒரு மகத்தான வாய்ப்பை கொடுத்தது. புத்தாண்டு துவங்குவதற்கு சற்று முன்பு, அந்த வாய்ப்பு ரஷ்யாவின் தலைவர் போரிஸ் யெல்ட்சின் வடிவில் வந்தது. இடைகால ஜனாதிபதியாக புடினை முன்மொழிந்தார்.


புடினுக்கு இது ஒரு "தாங்க முடியாத ஒரு கடும் சுமை" என்றுதான் கூறவேண்டும், ஆனால் அந்த பதவியை அவர் நிர்வகித்த விதம் அவரை சிறந்த நிர்வாகியாக மற்ற தலைவர்களுக்கு புரிய வைத்தது. பதவி ஏற்றபோதே அவர் ஒன்றை நினைத்துக்கொண்டார், நான் ஒரு தலைவன், இனி ரசியா என் தலைமையில் தான் இருக்கும், என்கிற எண்ணமே அவரிடம் இருந்தது.

நடிகர் அஜித்தின் சினிமா பஞ்சு டயலாக் “என்னோட வாழ்க்கையில ஒவ்வொரு நிமிசமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனது...” என்பது புடினுக்கு மிக சரியாய் பொருந்தும் அவரை அவரே தலைவராக செதுக்கி கொண்டார்...

பொறுப்பு அதிபர் பதவியில் இருந்தவாறு அதிபர் தேர்தலில் நிறுத்தபட்டார், அவருக்கு KGB யின் முழு ஆதரவும் இருந்தது, தேர்தலில் வெற்றிபெற்று 2000-ம் வருடம் மார்ச் 26-ல் ரசியாவின் அதிபராக பொறுப்பேற்றார், உள்நாட்டு விவகாரங்களில் இருந்து , சர்வதேச விவகாரங்கள் வரை எளிமையாக கையாண்டார், 2004 இல் மீண்டும் அதிபராக தேர்வு பெற்றார். ரசிய சட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து 2 முறை அதிபராக தேர்வு செய்யப்படலாம். என்கிற நிலை இருந்தது...2008 இல் தனது அதிபர் பதவியின் இரண்டாவது சுற்று முடித்தவுடன், தன்னை நாட்டின் பிரதமராக நியமித்துகொண்டார். மீண்டும் 2012 இல் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு தேர்வு பெற்றார்...

ரசிய ஆதரவு தலைவர்களிடம் நல்ல ஒரு தொடர்பை வைத்திருக்கிறார்... உலக நாட்டு தலைவர்களை சந்திப்பது, ஆதரவு நாடுகளுக்கு பயணம் செய்வது என்று எந்த விதத்திலும் குறைவற்ற ஒரு தலைவராக தனது பணியை செய்கிறார்.. எழுச்சி மிகு பேச்சாளராக இருக்கிறார்..

உலக விசயங்களில், அமைதிக்காகவும்,தீவிரவாதத்துக்கு எதிராகவும் புடின் குரல் கொடுப்பதோடு மட்டும் இல்லாமல் தேவை படும்போது தனது ராணுவத்தை அனுப்ப தயங்கியது இல்லை. ஐ.நா சபையில் ரசியாவின் பங்களிப்பு என்பது எப்பொழுதும் ஒரு நல்ல நிலைப்பாடாகவே இருந்திருக்கிறது.


ரசியாவின் இந்திய உறவு என்பது உலகம் அறிந்த ஒரு ரகசியம், இந்தியா சமீபகாலம் வரை ரசியா சார்ந்த சர்வதேச அரசியலை தான் முன்னெடுத்தது. உடையாத சோவியத் யூனியனின் பங்களிப்பை இந்தியா அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அன்றைய சோவியத் யூனியன் மற்றும் இன்றைய ரசியா பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு சிறந்த உறுதுணையாக இன்று வரை இருப்பது உண்மை. புடினுக்கும் இந்தியாவின் மீது ஒரு கரிசனமும், சுமூகமான அனுகுமுறையும் இருப்பது உண்மையே. 

இந்த 66 வயது இளைஞர் அரசியல் தவிர தற்காப்பு கலைகளான ஜூடோ, கராத்தே, பிற கலைகளான துப்பாக்கி சுடுதல், குத்து சண்டை, நீச்சல் , ஐஸ் ஹாக்கி, பனி சறுக்கு, மலை ஏறுவது, வன விலங்குகள் பாதுகாப்பது,

மீன் பிடித்தல், குதிரை ஏற்றம், படகு சவாரி, விமாங்களை இயக்கி பார்ப்பது, கிளைடர் விமானங்களில் பறப்பது, சமைப்பது, பலவித கார்களை ஓட்டுவது, F-1 பந்தய கார்களை ஓடுவது, புதிய தொழில் நுட்பங்களில் மிகவும் ஆர்வமாக தன்னை ஈடு படுத்தி கொள்வது, வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது, பியானோ இசைப்பது, உடற்பயிற்சி, என்று எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் கலந்து கொள்வார். நிஜ வாழ்கையில் ஒரு சகலகலா வல்லவன் தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


இன்று புடின் எடுக்க கூடிய முடிவுகள் சர்வதேச அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. சர்வதேச விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் புடினின் கருத்து என்ன என்கிற ஒரு கேள்வி அனைத்து நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. புடின் ஒரு திறமையான தலைவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உடைத்து சிதறிய ரசியா வை மீண்டும் உலகின் பலம் மிக்க ஒரு நாடாக ஆக்கியதில் புடின் அவர்களது பங்கு மிக அதிகம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...